Pages

Friday, November 4, 2011

எல்லோரும் அறிந்திருக்க வேண்டிய முதலுதவிக் குறிப்புகள்



எதிர்பாராத ஒரு ஆபத்தில் சிக்கி காயப்பட்ட அல்லது உயிர் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கும் ஒருவரைக் காப்பாற்றுவதற்கு அனுபவப்பட்ட இன்னொருவரால் உடன் செய்யப்படும் உதவியே முதலுதவி எனப்படும். வைத்தியர் வரும்வரை அல்லது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும்வரை உயிரை தாக்குப் பிடிக்கச் செய்யப்படும் சிகிச்சை, அல்லது நிலைமை மேலும் மோசமாகாது இருக்க செய்யப்படும் சிகிச்சை என்றும் கூறலாம்.
ஆபத்து எபோதும், எங்கேயும் எதிர்பாக்காமல் நிகழலாம். அதில் பாதிக்கப்பட்ட ஒரு உயிரை, உறவை அல்லது எம்மையே காப்பற்றிக் கொள்ள சில வழிமுறைகளை அனுபவம் மிக்க நிபுணர்கள் முன்வைத்துள்ளனர். உரிய நேரத்தில் சில உதவிகளைச் செய்வதன் மூலம் பேரிழப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். நாம் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்கு உதவியாகச் செய்வது அவர்களுக்கு சிலவேளைகளில் பேரிழப்பை ஏற்படுத்தி விடுகின்றன. எனவே நாம் முதலுதவி பற்றிய தெளிவான அறிவைப் பெற்றிருத்தல் அவசியமாகும்.
முதலுதவி பற்றி அறிந்திருக்க வேண்டிய குறிப்புகள்
•    முதலுதவி வசதிகளுடன் கூடிய முதலுதவிப் பெட்டியை எப்போதும் வீட்டில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அதில் அவசர தேவைக்கான மருந்துகள் இருத்தல் வேண்டும்.

•    முதலுதவிப் பெட்டி மற்றும் மருந்துகளை குழந்தைகளின் கைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டும்.

•    பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி செய்யும் பொழுது, முதலுதவி செய்யும் நபரின் பாதுகாப்பைக் கவனத்தில் கொள்ளல் அவசியம்.

•    அவசர சூழ்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இயல்பாக மூச்சுவிடுவதற்குத் தேவையான சூழ்நிலையினை ஏற்படுத்தித் தர வேண்டும். இல்லையெனில் செயற்கை சுவாசத்திற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

•    பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருந்து இரத்தம் அதிகமாக வெளியேறும் நிலையிலும், பாதிக்கப்பட்ட நபர் விஷம் உட்கொண்ட நிலையிலும், இதய மற்றும் சுவாச இயக்கங்கள் நிற்பது போன்ற நிலையிலும் மிகவும் வேகமாக செயல்படுதல் அவசியம். ஒவ்வொரு விநாடியும் மிக மிக முக்கியமானதாகும்.

•    பாதிக்கப்பட்டவர்கள் கழுத்திலோ அல்லது பின்புறத்திலோ காயம் இருந்தால் உடனே மருத்துவ வசதி அளிக்க வேண்டும். வாந்தி செய்து ஆபத்துக் கட்டத்தைத் தாண்டி விட்டால், ஒருசாய்த்துப் படுக்க வைத்து உடம்பை சூடாக வைப்பதற்கு போர்வை அல்லது கம்பளியால் போர்த்தி விட வேண்டும்.

•    முதலுதவி அளிக்கும் போதே மருத்துவ உதவிக்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்

•    அமைதியாய் இருந்து பாதிக்கபட்டவருக்கு மனத்தைரியத்தை அளிக்க வேண்டும்

•    பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருக்கும் போது திரவப்பொருட்களை எதையும் கொடுக்கக்கூடாது.

•    பாதிக்கப்பட்ட நபரின் மருத்துவ அடையாள அட்டை மற்றும் அவர்களுக்கு ஒவ்வாமை தரும் மருந்துகளின் குறிப்புகள் ஆகியவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

வெட்டுக்காயங்களுக்கான முதலுதவி

•    காயம்பட்ட இடத்தை சோப்பு மற்றும் தண்ணீரால் சுத்தமாக கழுவிவிட வேண்டும்.

•    இரத்தம் நிற்கும் வரை அழுத்தம் கொடுக்க வேண்டும்.
•    காயத்தைக் கட்டுவதற்று சுத்திகரிக்கப்பட்ட பேண்டேஜ் துணியை உபயோகப்படுத்த வேண்டும்.
•    ஆழமான காயமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

சிறுகாயங்கள் மற்றும் சிராய்ப்புகள்

•    வெதுவெதுப்பான நீரில் சோப்பினால் காயத்தினை நன்றாக கழுவ வேண்டும்.

•    இரத்தக்கசிவு இருப்பின் சுத்தமான பேண்டேஜ் துணியினால் காயத்தினைக் கட்ட வேண்டும். இது காயத்தின் மீது தொற்று ஏற்படுவதைத் தவிர்க்கிறது.

தொற்று ஏற்பட்ட காயத்திற்கான அறிகுறிகள்

•    காயத்தின் மீது வீக்கம்.

•    காயம் சிவந்து காணப்படுதல்.
•    வலி.(நோவு)
•    காய்ச்சல்.
•    காயத்தில் சீழ்பிடித்தல்.

மூச்சுத்திணறல்
மூச்சுத்திணறலினால் பாதிக்கப்பட்ட நபர் இருமினால் உடனடி ஆபத்தான நிலையில் இல்லை என்று கருதலாம். அவ்வாறு இருமும் போது, தொண்டையில் அடைத்துள்ள பொருள் வெளியே வராமலிருந்தால், சிரமத்துடன் மூச்சு விடும் நிலை நீடித்தால், பாதிக்கப்பட்ட நபரின் உடல் நீலநிறமாக மாறுவதுடன் மூச்சுத்திணறலின் அறிகுறிகள் இருப்பின், அந்நபரிடம் மூச்சுத்திணறலினால் பாதிப்பு இருக்கிறதா என்பதை கேட்டறிதல் அவசியம். பாதிக்கபபட்ட நபரால் பேசமுடியாத நிலையிலும் அவரால் தன் தலை அசைத்து பதிலுரைக்க முடியும். இவ்வாறு கேட்பது மிக முக்கியம். ஏனெனில் மாரடைப்பினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் இதே போன்ற அறிகுறிகள் இருக்கும், ஆனால் அவரால் பேச இயலும்.

பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் அழைத்து செல்வதில் தாமதம் செய்யக்கூடாது.

மயக்கம் ஏற்படுதல்
மயக்கம் அடைவதற்கு முன்பு, கீழ்கண்ட அறிகுறிகளை ஒருவரால் உணர முடியும்.

•    தலை கனமில்லாமல் இலேசாக இருப்பது போன்ற உணர்வு

•    சோர்வு
•    வாந்தி ஏற்படுவது போன்ற உணர்வு
•    தோல் வெளுத்துக் காணப்படுதல்.

மேற்கண்ட அறிகுறிகளுடன் ஒரு நபர் மயக்க நிலையை உணரும்போது

•    முன்புறமாக சாய வேண்டும்

•    தலையை முழங்கால்களுக்கு நேராக கீழே சாய்த்துக்  கொள்ள் வேண்டும். தலையானது இதய பகுதியை விட கீழாகத் தாழும் போது மூளை பகுதியின் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது.

பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவை இழக்கும் போது

•    பாதிக்கப்பட்ட நபரின் தலை குணிந்தும், கால்களை  உயர்த்தியுள்ள நிலையில் படுக்க வைக்க வேண்டும்.

•    இறுக்கமான உடைகளைத் தளர்த்தி விட வேண்டும்.
•    குளிர்ந்த ஈரமான துணிகளை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் போட வேண்டும்.
மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலமாக பாதிக்கப்பட்ட நபர் உடனடியாக சுயநினைவைப் பெற்றால், பாதிக்கப்பட்ட நபரிடம் அவரைப் பற்றிய கேள்விகளை கேட்பதன் மூலமாக அவர் முழுமையாக சுயநினைவப் பெற்றுள்ளாரா என்பதனை உறுதிசெய்து கொள்ள வேண்டும்
பாதிக்கப்பட்ட நபரை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்வது மிகச் சிறந்தது.

வலிப்பு
வலிப்பு என்பது திடீரென ஒருவரின் உணர்வில்லாமல் ஏற்படக்கூடிய திசுக்களின் சுருங்குதல் ஆகும். திடீரென ஏற்பட்ட உடல்நலக் கேட்டினாலோ அல்லது "எபிலப்சி" என்ற நோயினாலோ ஓருவருக்கு  வலிப்பு ஏற்படலாம். பாதிக்கப்பட்ட நபரின சுவாசம் நின்று போகும் தருவாய் ஏற்பட்டால், ஆபத்தான நிலையாகும். இது போன்ற தருணங்களில் மருத்துவரின் உதவி அத்தியாவசியமான ஒன்றாகும்.

அறிகுறிகள்
•    உடல் தசைகள் இறுக்கமாகவும் கடினமாகவும் மாறுவது, பின் உடலில் உதறுவது போன்ற அசைவுகள்.

•    நோயாளி தனது நாக்கினை கடித்துக் கொள்ளக் கூடும் அல்லது சுவாசிப்பதை நிறுத்தி விடக் கூடும்.
•    முகம் மற்றும் உதடு போன்றவை நீலநிறமாக மாறிவிடுதல்.
•    சில சமயங்களில் அதிகமான உமிழ்நீர் அல்லது நுரை வாயிலிருந்து வெளியாகுதல்.
முதலுதவி
•    பாதிக்கப்பட்ட நபரின் அருகில் உள்ள அனைத்துப் பொருட்களையும் அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தலைக்கு அடியில் மென்மையான ஏதாவது ஒரு பொருளை வைக்க வேண்டும்.

•    நோயாளிகளின் பற்களுக்கு இடையிலோ அல்லது வாயிலோ எத்தகைய பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
•    எத்தகைய திரவ உணவுப் பொருட்களையும் கொடுக்கக்கூடாது.
•    மூச்சு இழக்க நேரிட்டால், பாதிக்கப்பட்ட நபரின் சுவாச பாதையில் அடைப்பு உள்ளதா என்று பார்ப்பதுடன், நல்ல காற்றோட்ட வசதி செய்ய வேண்டும்.
•    மருத்துவ உதவி கிடைக்கும் வரை பரபரப்பு இல்லாத அமைதியான சூழலை பாதிக்கப்பட்ட நபருக்கு ஏற்படுத்தித் தரவேண்டும்.
•    பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர் வலிப்பு நின்றவுடன், மயக்க நிலை அல்லது மீண்டும் வலிப்பினாலோ பாதிக்கப்படக்கூடும்.
முடிந்த வரையில் உடனடியாக பாதிக்கப்பட்ட நபரை மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டும்.

இரத்தக்கசிவு
இரத்த சுழற்சி அமைப்பிலிருந்து ஏற்படும் இரத்த இழப்பே இரத்தக்கசிவு ஆகும். உடலின் உள்ளே இருக்கும் இரத்தக் குழாயிலிருந்தும் இரத்தக் கசிவு ஏற்படலாம். மூக்கு, வாய் அல்லது தோலில் ஏற்பட்ட வெட்டுக்காயம் ஆகியவை மூலம் உடலின் வெளிப்புறத்திலும் இரத்தக் கசிவு ஏற்படலாம்.. காயத்தில்

வேற்றுப்பொருட்கள் இருந்தால் என்ன செய்யவேண்டும்?
வேற்றுப்பொருட்களாக கண்ணாடி, மரத்துண்டு அல்லது உலோகம் முதலியவை இருக்கலாம்.

வேற்றுப்பொருட்கள் காயத்தின் உள்ளே போகாமல் இருக்க விரல்களைக் கொண்டு காயத்தின் ஓரத்தில் அழுத்தம் கொடுங்கள். வேற்றுப்பொருளை வெளியே எடுக்காதீர்
காயத்தினை இறுக்கமான பாண்டேஜ் வைத்து கட்டுப்போடுங்கள்

காயம் கையிலோ அல்லது காலிலோ ஏற்பட்டால் அதிகமான இரத்தக்கசிவு இருக்கும். எனவே காயம்பட்டவரை படுக்கவைத்து கை அல்லது காலை இதயத்தின் மட்டத்திலிருந்து மேலே இருக்குமாறு வைத்து ஆம்புலன்ஸை அழையுங்கள் அல்லது காயம்பட்டவரை காரின் மூலம் மருத்துவமனைக்கு வையுங்கள். எடுத்துச் செல்லுங்கள்.

இருமலுடன் வரக்கூடிய இரத்தம்
இருமும் பொழுது எப்போதாவது ஒருமுறையாவது கையளவு அல்லது அதற்குமேல் இரத்தமும் சேர்ந்து வந்தாலும் கூட அது நோயாளிக்கும் அவரது உற்றாருக்கும் அதிர்ச்சி தரக்கூடியது. இது நுரையீரலில் ஏற்படும் நோய்களான நுரையீரல் புற்றுநோய், தீவிர நிலையிலுள்ள காசநோய் அல்லது நுரையீரலில் துளைகளை உருவாக்கும் இதர நோய்களினால் ஏற்படுகிறது.

நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை
•    தலை மற்றும் தோள்ப்பட்டையை சற்று உயர்வாக பாதிக்கப்பட்ட பக்கம் சாய்த்து நோயாளியைப் படுக்க வையுங்கள்

•    வாய் வழியாக எந்த உணவையோ நீரையோ கொடுக்கவேண்டாம்

மார்பில் ஏற்பட்ட காயத்தினால் நுரையீரலில் இரத்தக்கசிவு இருக்குமானால் சிறிதளவு பாலித்தீன் கொண்டுள்ள நாடா மூலம் காயத்தை இறுக்கமாகக் கட்டுங்கள். இது நெஞ்சுக் கூட்டுக்குள்ளும் காயத்திலும் காற்று புகாமல் தடுக்கும் இன்ன பிற பாதிப்புகளை ஏற்படுத்தாது.

உடனே டாக்டரை வரச்செய்யுங்கள் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை அழையுங்கள்.

வயிற்றிலிருந்து ஏற்படும் இரத்தவாந்தி
வயிற்றில் உருவான அல்சர் நோயால் ஏற்பட்ட இரத்தக்கசிவு காரணமாக இது ஏற்படுகிறது. வயிற்றில் இரத்தக்கசிவு அதிகமாக இருக்கும்போது திடீரென வயிற்றில் சுருக்கம் ஏற்பட்டால் நோயாளி இரத்தவாந்தி எடுப்பார். இவ்வகையிலான இரத்தப்போக்கு ஒரு லிட்டர் அல்லது அதற்கு மேலும் இருக்கலாம்.

நோயாளியை கவனித்துக் கொள்ளும்முறை
•    நோயாளியைப் படுக்கவைத்து அவரின் கால்கள் மற்றும் பாதங்கள் உடல் மட்டத்தைவிட சற்று உயர்வாக இருக்குமாறு செய்யுங்கள்.

•    அவரை மிதமான வெப்பநிலையில் வையுங்கள். போர்வையைப் போர்த்தியோ அல்லது ஓற்றடம் கொடுத்தோ அதிக சூடு ஏற்படுத்தாதீர். கதகதப்பான நிலையில் வையுங்கள். அதே நேரம் குளிரில் நடுங்கவும் வைத்துவிடாதீர்கள்.
•    வாய் வழியாக எந்த உணவையோ நீரையோ கொடுக்கவேண்டாம்.
•    தண்ணீர் கொண்டு வாயினைக் கழுவலாம். ஆனால் அந்நீரினை சிறிதளவேனும் விழுங்கிவிடக் கூடாது.
•    உடனே டாக்டரை வரச்செய்யுங்கள் அல்லது மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல ஆம்புலன்ஸை அழையுங்கள்.
நோயாளி மயக்கமடைந்துவிட்டால், உடனே அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக, ஒருபக்கமாக சாய்த்து படுக்க வையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்.

வெப்பத்தினால் ஏற்படும் பாதிப்பு
•    வெப்பத்தினால் பாதிக்கப்பட்ட நபரின் உடலை உடனடியாக குளிர்விக்க வேண்டும்.

•    முடிந்தால் பாதிக்கபபட்ட நபரை குளிர்ந்த நீரில் இடலாம். மேலும் குளிர்ந்த ஈரமான துணியால் உடலைப் போர்த்தி விடலாம். ஐஸ் கட்டியினால் ஒத்தடம் கொடுக்கலாம்.
•    உடல்சூடு சாதரணமான நிலைக்கு வநதவுடன், பாதிக்கப்பட்ட நபரை, குளிர்ந்த இடத்தில் ஓய்நதிருக்கச் செய்யவும்
•    உடல்சூடு அதிகரிக்கும் போது மீண்டும் குளிர்விக்கும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
•    எவ்விதமான மருந்துகளையும் கொடுக்கக் கூடாது.
•    மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

மின்சார அதிர்ச்சி ( தாக்குதல் ) & தண்ணீரில் மூழ்குதல்

மின்சாதனங்கள் மற்றும் மின் கம்பிகளுக்கு அருகில் ஒருவர் சுயநினைவின்றி கிடப்பதைக் கொண்டு அவர் விபத்துக்குள்ளானவர் என்பதை மிக சுலபமாகக் கண்டறியலாம்.

சிகிச்சை

விபத்துக்குள்ளானவரைத் தொடும் முன் மின் இணைப்புகளைத் துண்டித்துவிடுங்கள்

•    விபத்துக்குள்ளானவரால் சுவாசிக்க முடிந்தால் உடனே அவரை விபத்திலிருந்து மீளும் நிலையில் வையுங்கள். அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்.
•    விபத்துக்குள்ளானவரின் இதயம் மற்றும் மூச்சு நின்று போயிருந்தால்,கிஸ் ஆஃப் லைஃப் (வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை)என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.
•    மருத்துவரை அல்லது ஆம்புலன்ஸை அழைக்க ஆள் அனுப்புங்கள்

தண்ணீரில் மூழ்குதல்
சிகிச்சை
காற்றோட்டத்திற்கு வழி வகை செய்து விபத்துக்குள்ளானவர் சுவாசிக்கிறாரா? இதயம் சரியாக இயங்குகிறதா? என்பதனைக் கண்டு தீர்மானிக்கவும்.

•    விபத்துக்குள்ளானவரின் இதயம் மற்றும் மூச்சு நின்று போயிருந்தால், கிஸ் ஆஃப் லைஃப் (வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை) என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.
•    விபத்துக்குள்ளானவர் அப்போதுதான் சுயநினைவை இழந்தவராகக் காணப்பட்டால், தண்ணீரிலிருந்து எடுத்தவுடன் அவரை விபத்திலிருந்து மீளும் நிலையில் வையுங்கள். இங்கு மீளுயிர்ப்பு நிலை என்பது குடித்த திரவம் வெளியேறும் வண்ணம் தலையைத் தாழ்த்தி உடலை ஒரளவு உயர்த்தி ஆளைப் பிரட்டி வைப்பதாகும்.
•    மருத்துவரை அல்லது ஆம்புலன்ஸை அழைக்க உடனடியாக ஆள் அனுப்புங்கள்

தீ மற்றும் வெப்ப காயங்கள்
தீப்புண்கள் மற்றும் வெப்ப காயங்கள் முதலியவை சருமத்தில் தழும்புகள், உடல் பகுதிகளில் உருமாற்றம், மனச்சோர்வு மற்றும் தாழ்வு மனப்பான்மை போன்ற பாதிப்புகளை விளைவிக்கும். இப்படிப்பட்ட விளைவுகள் நீண்டநாட்கள் கழித்து மறையலாம்.சில சமயங்களில் நிரந்தரமானவைகளாக இருக்கும். எனவே தீவிர பாதிப்புகளுக்கு உட்பட்ட புண்களுக்கு சரியான, ஜாக்கிரதையான மற்றும் தகுந்த சிகிச்சை அவசியம். உடலானது சுட்டெரிக்கும் அனல் மற்றும் சக்திவாய்ந்த வேதிப்பொருட்களுடன் படும்போது / மிக நெருக்கமாக தொடர்புகொள்ளும்போது புண்கள் ஏற்படுகின்றன. கீழ்க்கண்ட நிகழ்வுகள் மூலம் இவை பெரும்பாலும் நடக்கின்றன.

தீக்காயங்கள் ஏற்பட்டால்
கடாய் மற்றும் பாத்திரங்களின் கைப்பிடிகள், அடுப்பு, சமையல் பாத்திரங்கள் போன்ற சமையலறை சாமான்கள்.
•    தண்ணீர் கொதிக்கவைக்கும் பாத்திரங்கள், கருவிகள்,ஹீட்டர், துணி தேய்க்கும் அயர்ன்பாக்ஸ் உள்ளிட்ட நவீன மின்சாதனங்கள்

•    திறந்த வெளியில் சமைக்கும் பொழுதும், எரிவாயுக்கள் மற்றும் மின்சாரம் போன்றவற்றாலும் எதிர்பாராமல் நிகழும் தீ விபத்துகள்.
•    ஆடைகள் மற்றும் பிற பொருட்கள் தற்செயலாக தீப்பற்றிக்கொள்ளுதல்
•    வெளுப்பான்கள் மற்றும் வீரியம் மிக்க கிரிமிநாசினிகள்
•    சுட்டெரிக்கும் சூரிய வெப்பம் மற்றும் அனல் காற்று
•    கயிறைக் கைகளால் பற்றிக்கொண்டு அதி வேகத்தில் இறங்கும் பொழுது ஏற்படும் வெப்பத்தால் உருவாகும் காயங்கள்
பெரும்பாலான தீப்புண்கள் வீடுகளில் ஏற்படுகின்றன.எனவே வீடுகளிலேயே சிகிச்சை அளிக்கப்படலாம்.பெரும்பாலான வீடுகளில் நடக்கும் விபத்துக்கள் சமயலறையில்தான் ஏற்படுகின்றன.
விபத்துக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க சமையலறையே சிறந்த இடமாகும். இனிமேல் எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்கும்வண்ணம்,பாதுகாப்பின் முக்கியத்துவத்தை நாம் வலியுறுத்த வேண்டும்.வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், குழந்தைகள் (குறிப்பாக தளர்நடை குழந்தைகள்) ஆகியோர்தான் அதிகளவில் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.வயதானவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் அனைத்து தீப்புண்களையும் அலட்சியம் செய்யாமல் அதிக கவனம் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

சில முக்கியமாகச் செய்யக்கூடாதவைகள்

காயம் ஏற்பட்டதும் உடலில் எந்த விதமான தீப்புண்கள் ஏற்பட்டுள்ளது? நீங்கள் என்ன உதவிகள் செய்யலாம்? என்பதனை அறியும் முன் நீங்கள் கண்டிப்பாக செய்யக்கூடாத சில காரியங்களும் உண்டு.
அவை பின்வருமாறு:
•    ஒருபோதும் தீப்புண்களின் மீது வெண்ணெய், மாவுகள் அல்லது சமையல் சோடா முதலியவற்றைப் போடாதீர்கள்

•    ஒருபோதும் ஆயின்மென்ட், லோஷன் மற்றும் எண்ணெய்களை சிகிச்சையளிக்கப் பயன்படுத்தாதீர்கள்.
•    ஒருபோதும் புண் மற்றும் கொப்புளங்களைக் கிழிக்கவோ, கிள்ளவோ அல்லது உடைக்கவோ செய்யாதீர்கள்
•    தேவையின்றி தீப்புண்களைத் தொடவோ அல்லது கையாளவோ செய்யாதீர்
•    தீக்காயத்தில் ஒட்டியுள்ள துணிகளை ஒருபோதும் அகற்ற முயற்சிக்காதீர்.
இன்றைய நாட்களில் உள்ள பெரும்பாலான ஆடைகள் சிந்தடிக் பொருட்களால் ஆனவை. அவை தீயினால் உருகி மிட்டாய்கள் போன்று சருமத்துடன் ஒட்டிக்கொள்ளும். இதுபோன்று ஒட்டிக்கொண்ட துணிகளை அகற்ற முயற்சிப்பீர்கள் என்றால் அது தேவையில்லாமல் சருமத்தில் வலியையும் புண்ணின் பாதிப்பையும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட துணிகளை கிருமித்தொற்று இல்லாமல் முறையாக அகற்ற வேண்டும்.எனவே அத்துணியினை அப்படியே விட்டுவிடுவது நல்லது

பொதுவான சிகிச்சை
சில குறிப்பிட்ட வகை தீக்காயங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து தீக்காயங்களுக்கும் பொதுவான சிகிச்சை முறைகள் உண்டு. மிகச் சிறிய காயங்களைத் தவிர, இதர காயங்கள் ஆபத்தானவை, அதிக வலியுள்ளவை மற்றும் உளைச்சலை ஏற்படுத்தும். வீடுகளில் ஏற்படும் தீ விபத்து,சாலைகளில் பெட்ரோலியப் பொருட்களால் உருவாகும் தீ விபத்து போன்றவை பெரும்பாலான சமயங்களில் நிகழக்கூடியவை. இவைகளின் அவசர நிலை மற்றும் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல்பட வேண்டும்.உதவி செய்வதற்கான முதற்கட்ட செயல்பாடுகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை.

விபத்துக்குள்ளானவரை அமைதிப்படுத்தி, ஆறுதல் படுத்தி தேற்ற வேண்டும் என்பதை அவசியம் ஞாபகத்தில் வைக்கவும். அவர்களிடம் கனிவாக இருங்கள். அதே சமயம் விரைவாக செயல்படுங்கள்.செய்ய வேண்டியவகளை முறையாகவும் வரிசைப்படியும் செய்யுங்கள்.
சருமம் மற்றும் அதில் உள்ள திசுக்களில் தீக்காயம் ஏற்பட்டதும் அவற்றிலிருந்து அதிகளவு ரத்தம் மற்றும் ஒரு வகையான திரவம் வெளியேறும். பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள திசுக்கள் அதிக வெப்பத்தினைத் வெகு நேரம் தாங்கிக்கொள்ளக்கூடியவை.இது அதிக வலி மற்றும் பாதிப்புக்கு வழிவகுக்கும். வெப்பத்தை முடிந்த அளவு போக்கவேண்டும் என்பதே முதற்கட்ட சிகிச்சையின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும். முதலுதவி சிகிச்சை மூலம் அவசியம் சிதைவுற்ற திசுக்களில் உள்ள வெப்பத்தினைக் குறைக்க வேண்டும்.

பராமரிப்பு
பக்கெட் அல்லது சமயலறை தண்ணீர் தொட்டி/சிங்கில் குளிர்ந்த நீரை நிரப்பி அதில் காயப்பட்ட பகுதியை அமிழ்ந்திருக்கும் வண்ணம் செய்யுங்கள்.அதிக வேகமாக இல்லாமல் மிதமான வேகத்தில் குளிர்ந்த தண்ணீர் வரும் குழாயின் கீழ் தீக்காயமடைந்த பகுதியைக் காட்டி தண்ணீர் படும்படியும் செய்யலாம்.

•    தீப்புண்ணை சுமார் 15 நிமிடங்கள் குளிர்ந்த நீரில் அமிழ்ந்த வண்ணம் அவசியம் வைக்கவேண்டும். அப்படி வைப்பது சிரமமாக( முகத்தில் உள்ள தீக்காயம் போன்றவற்றுக்கு )இருந்தால், ஏதாவது மென்மையான மற்றும் தூய்மையான துணியைக் குளிர்ந்த தண்ணீரில் நனைத்து அந்த காயத்தின் மீது வைக்கவும

இவ்வாறு அடிக்கடி மீண்டும் குளிர்ந்த தண்ணீரில் நனைத்து மாற்றி மாற்றி போடவும். ஆனால் தீக்காயத்தைத் துணியைக் கொண்டு தேய்க்காதீர்கள். இந்த சிகிச்சைகள் தீக்காயமடைந்த திசுவிலுள்ள வெப்பத்தினை ஓரளவுக்கு வெளியேற்றவும் மற்றும் மென்மேலும் ஏற்படும் சிதைவு, சிவத்தல், கொப்புளம் வருதல்,வலியின் அளவு மற்றும் தன்மையைக் குறைக்கவும் தடுக்கவும் உதவும்.

•    காயம் ஏற்பட்டவுடன் மோதிரம், வளையல், ஷூ மற்றும் அணிந்துள்ள அனைத்து ஆபரணங்களையும் சீக்கிரமாக நீக்க வேண்டும். ஏனெனில் காயத்தின் காரணமாக வீக்கம் ஏற்படலாம். அப்படி வீக்கம் ஏற்பட்டால் மேற்கூறிய பொருட்களை நீக்குவது பின்னர் கடினமாகிவிடும்.

•    சிறிய மேலான தீக்காயங்களாக இருந்தால் வலிநீங்கியவுடன் ஜாக்கிரதையாக புண்ணை உலரச் செய்யவும். பின்னர் அதை சுத்தம் செய்து பக்குவமாக கட்டு (ட்ரஸ்ஸிங்) போடவும்.
பெரிய காயங்கள் அல்லது ஆழ்ந்த தீக்காயங்களை குளிர்ந்த தண்ணீரிலிருந்து எடுத்தவுடன் அவசியம் அவற்றை சுத்தமான,கந்தல் இல்லாத மற்றும் பஞ்சு ஒட்டாத துணியை வைத்து இலகுவாக மூடவேண்டும் (கை,கால்களை மூட சுத்தமான பைகள், நீளமான காலுறைகள் பொருத்தமானவை)

•    மருத்துவரை அழைக்க ஆள் அனுப்புங்கள் அல்லது ஆம்புலன்ஸை அழையுங்கள்

•    தபால் தலை அளவைவிடப் ( 2 x 2 1/2 செ மீ ) பெரியதாக உள்ள எந்த தீப்புண்ணும் அவசியம் ஒரு மருத்துவரால் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். நீங்கள் குளிர்ச்சி வைத்தியம் கொடுத்தவுடன் மருத்துவரை அழைக்க வேண்டும்.

•    பெரிய அளவில் பலத்த காயம் இருப்பின் மருத்துவமனை பராமரிப்பு தேவை.அப்படி அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது, ஐஸ் கட்டிகளை டவல்களில் வைத்துக்கட்டி அதைக் காயத்தின் மேல் வைத்துக் கொண்டே செல்ல வேண்டும்.

•    தீக்காயமடைந்த பகுதியை நோய்த்தொற்று ஏற்படாமல் மூடிவைப்பது அவசியம். அப்படி செய்வது விபத்துக்குள்ளானவர் காயத்தின் அளவையும்,கொடூரத்தையும் பார்ப்பதைக் குறைக்கும்.அதனால் அவரின் பதற்றம் மற்றும் பயம் சற்றே குறையும். நைலான் அல்லாத மேசை விரிப்புத்துணி,துண்டு,சால்வை உள்ளிட்டவை உடலை மூடுவதற்கு மிகவும் உகந்தவை. உடலின் மேல் லேசாக மற்றும் அழுந்தாமல் மூட/போர்த்த வேண்டும்.

•    மருத்துவர் அல்லது ஆம்புலன்ஸிற்காகக் காத்திருக்கும் போது விபத்துக்குள்ளானவரை மீண்டும் தேற்றுங்கள்,ஆறுதல் கூறுங்கள். குழந்தையாக இருப்பின் அரவணைத்து எடுத்துச் செல்லுங்கள். அப்படி செய்வது மிகமுக்கியம். ஆனால் அப்படி செய்யும்போது பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

சிறப்பு சிகிச்சை தேவைப்படும் தருணங்கள்:
துணிகளில் ஏற்படும் தீ
•    துணிகளில் தீ பற்றியெரியும் போது, தீயைத் தண்ணீர் ஊற்றி அணைக்கவும். விபத்துக்குள்ளானவரின் மீது கெட்டித்துணி, போர்வை, கோட், சாக்கு/கோணி போன்றவற்றால் சுற்றி அணைக்கலாம். நீங்கள் விபத்துக்குள்ளானவரை போர்வை கொண்டு சுற்றும் போது தீயானது உங்களைத் தாக்காதவாறு போர்வையை உங்களுக்கு முன் இருக்கும் வண்ணம் வைத்துக்கொள்ளுங்கள்

•    ஒருவன் தீயில் பயங்கரமாக பற்றியெரியும் போது, வலி தாங்க முடியாமல் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு ஓடலாம். இதனால் தீயானது வேகமாகப் பரவும்.அவர் காற்றோட்டமான பகுதிக்கும் ஓடலாம். அப்படி காற்றோட்டமான பகுதிக்கு செல்லும் போது தீ அதிகமாகப் பற்றியெரியும். எனவே விபத்துக்குள்ளானவரை ஒரே இடத்தில் இருக்கும்படி செய்யவேண்டும்.

•    தீ அணைந்துவிட்டால், ஏற்கெனவே கூறியுள்ள பொதுவான சிகிச்சைகளைத் தொடர்ந்து அளிக்கவேண்டும்.

தீக்காயங்களுக்கான பொதுவான சிகிச்சையைத் தொடர்ந்து செய்யுங்கள்

கண்களில் வேதிப்பொருள் தெளிப்பு
இது நிரந்தரமான பாதிப்பு மற்றும் பார்வை இழப்பையும்கூட ஏற்படுத்தும். எனவே சிகிச்சை அளிப்பதில் அதி வேகமாக செயல்பட வேண்டும். அவ்வேதிப்பொருளின் வீரியத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

•    விபத்துக்குள்ளானவரை மல்லாக்காக படுக்கவைத்து, அவரின் கண்ணிமைகளை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலைக்கொண்டு கண்களை திறந்த வண்ணம் வைத்து, கண்ணில் தொடர்ந்து குளிர்ந்த நீரை மூக்குப்பக்கமாக இருந்து ஊற்றவும் ( அவ்வாறு செய்வது வேதிப்பொருள் மற்றொரு கண்ணை பாதிக்காமல் பாதுகாக்கிறது)

•    கண்ணிமைகளுக்குள் வேதிப்பொருட்கள் தங்காமல் இருக்க, கண்ணிமைகளை பல முறை மூடி மூடி திறக்குமாறு செய்யுங்கள்.

•    இப்படி கண்களைக் கழுவும் செயலைக் குறைந்தது 10 நிமிடங்களாவது தொடர்ந்து செய்யுங்கள்.

•    சிகிச்சைக்கு பின் கண் இமைகளை மூடி அதன் மேல், துணியை வைக்கவும் (கண்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் இலகுவாக இருக்கும்படி வைக்கவேண்டும்)

•    விபத்துக்குள்ளானவரை தேற்றி, ஆம்புலன்ஸை அழையுங்கள் அல்லது அவரை மருத்துவரிடம் கொண்டுசெல்லுங்கள்.

மின்சார தீக்காயங்கள்
இவை பொரும்பாலும் சிறிய அளவில் இருக்கும் ஆனால் ஆழமானதாகவும், அதிக பாதிப்புகளுடனும் இருக்கும். மின்சாரம் தாக்கப்பட்ட இடங்களில் காயங்கள் காணப்படும்.

•    விபத்துக்குள்ளானவருக்கு சிகிச்சை அளிக்கும் முன் மின் இணைப்பைத் துண்டிக்கவேண்டும்.

•    மின்சார விபத்துக்குள்ளானவர் தண்ணீருக்குள் கிடந்தால், நீங்கள் தண்ணீரிலிருந்து சற்றே விலகி நின்று செயல்படுங்கள்.ஏனெனில் தண்ணீர் ஒரு நல்ல மின் கடத்தி. எனவே விபத்துக்குள்ளானவரின் அக்குள் பகுதியைப் பிடித்துத் தூக்காதீர்கள்.

•    விபத்துக்குள்ளானவரின் சுவாசத்தை சரிபாருங்கள். மின்சாரம் மார்பு வழியாக பாய்ந்திருக்கலாம்.அதனால் இதயத்துடிப்பு மற்றும் சுவாச மூச்சை நிறுத்திவிடக்கூடும். அப்படி இருப்பின் கிஸ் ஆஃப் லைஃப் (வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை)என்ற முறையினையும் மற்றும் மார்பு பகுதியில் கைகளால் அழுத்தமான இயக்கம் கொடுத்து மசாஜ் செய்தலையும் உடனடியாக ஆரம்பிக்கவும்.

நச்சுப்பொருட்கள்
நச்சுப் பொருட்கள் திட, திரவ அல்லது வாயுப் பொருளாக இருக்கலாம். அவை அதிக அளவில் உடலில் சென்று கலந்து விட்டால் உடல் நலனுக்கு பாதிப்பையோ உயிரிழப்பையோ ஏற்படுத்திவிடும்.

கீழ்க்கண்ட மூன்று வழிகளில் அவை உடலுக்குள் நுழைகின்றன.

•    நுரையீரல்கள் மூலம்

•    தோல் / சருமத்தின் மூலம்

•    வாய் வழியாக

நுரையீரல்கள் வழியாக
நுரையீரல்கள் வழியாக நச்சுக்கள் நுழைவது பற்றி 'சுவாசித்தல்' என்ற தலைப்பின் கீழ் விவரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் வாய் மற்றும் சருமத்தின் வழியாக உடலுக்குள் நச்சுகள் எதேச்சையாகவோ அல்லது வேண்டுமென்றோ நுழைவது குறித்து காண்போம். குறிப்பிட்ட சிலவகை வேளாண் மற்றும் தோட்டக்கலை பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தும்போது உருவாகும் நச்சுகள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் குறித்தும் இப்பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.

பெரும்பான்மையான நச்சுப் புகுதல் தொடர்பான நிகழ்வுகள் எதேச்சையாக நடக்கக்கூடியவையே. இப்பாதிப்புகளுக்கு எதிரான அறிவார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் அவசியம் ஆகும்

சில முக்கியமாகச் செய்யக்கூடாதவைகள்:
மாத்திரைகள் மற்றும் மருந்துகளைக் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் வைக்கக்கூடாது

கைக்கு எட்டாத உயரத்தில் பூட்டப்பட்ட அலமாரிகளில் வைக்கவும் (எ-கா: பீரோ, அலமாரிகளுக்கு மேல்).
•    ஒருபோதும் மாத்திரை மருந்துகளை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்காதீர்கள். அவை தரம் கெட்டுவிடும். மருத்துவ சிகிச்சை முடிந்த பின் மீதமுள்ள மருந்து மாத்திரைகளை அவற்றை வாங்கினவர்களிடம் திரும்பக் கொடுத்துவிடுங்கள் ( மருந்துக் கடை அல்லது மருத்துவரிடம் ) அல்லது கழிப்பறையில் போட்டு தண்ணீரை ஊற்றி அப்புறப்படுத்துங்கள்.

•    ஒருபோதும் இருட்டில் மருந்துகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். எப்பொழுதும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் போது அல்லது கொடுக்கும் போது என்ன மாத்திரை என லேபிலைப் படிக்கவும்.

•    எலுமிச்சை பழ பானங்கள், குளிர் பானங்கள் அல்லது பிற பானங்கள் உள்ள பாட்டில்களில் கெமிக்கல்,மருந்து உள்ளிட்ட நச்சு திரவங்களை ஒருபோதும் ஊற்றி வைக்காதீர்கள். பிள்ளைகள் அவற்றைத் தவறாக அறிந்துகொண்டு அவற்றைக் குடித்துவிடும்.

•    வீடு துப்புறவு செய்ய பயன்படுத்தும் டிடெர்ஜென்ட், ப்ளீச்சிங் பவுடர்,கெமிக்கல் உள்ளிட்டவைகளை ஒருபோதும் கை/பாத்திரம் கழுவும் சிங்க் தொட்டிகளுக்குக் கீழே வைக்காதீர்கள். தவழும் குழந்தைகள் அவற்றை தட்டி விட்டோ அல்லது கீழே தள்ளியோ விடுவர். ( வெளுப்பான் மற்றும் கழிவறை சுத்தம் செய்யும் திரவம் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்துவிட்டால் அவை கழிவறையை மிக நன்றாக சுத்தம் செய்யும் என்று எண்ண வேண்டாம். மாறாக அவை நச்சுவாயுவினை உற்பத்திசெய்யும். அந்நச்சுவாயுவினை நுகர்ந்தால் அது உடல் நலனுக்கு நல்லதல்ல.)

•    ஒருபோதும் மிக அதிகமான உப்புக்கரைசலைக் கொடுக்காதீர்கள்.
விபத்துக்குள்ளானவர் சுயநினைவின்றியும் மற்றும் வாயில் ஏதேனும் பாதிப்புடனும் இருந்தால், அவருக்கு ஒருபோதும் எந்த ஒரு பொருளையும் வாய் வழியாகக் கொடுக்காதீர்கள்.

•    விபத்துக்குள்ளானவர் சுயநினைவின்றி இருந்தால் எந்த ஒரு பொருளையும் வாய் வழியாக கொடுக்க முயற்சிக்கக் கூட வேண்டாம்.

•    பெட்ரோலியப்பொருட்களைக் குடித்தவர் அதை வாந்தி பண்ணும்வரை ஒருபோதும் காத்திருக்காதீர்கள்.உடனே அவரி மீளுயிர்ப்பு நிலைக்குக் (Recovery Position) கொண்டுசெல்லவும். இங்கு மீளுயிர்ப்பு நிலை என்பது குடித்த திரவம் வெளியேறும் வண்ணம் தலையைத் தாழ்த்தி உடலை ஒரளவு உயர்த்தி ஆளைப் பிரட்டி வைப்பதாகும்.

•    மது அருந்தி இருக்கும்போது எவ்வித மாத்திரைகளையும் குறிப்பாக தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்ள அனுமதிக்காதீர். மதுவுடன் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது  மரணத்தையோ அல்லது தீவிர உபாதைகளையோ விளைவிக்கும்.

வாழ்வின் ஒவ்வொரு நாளிலும் நாம் எதிர்கொள்ளும் சில பொதுவான நச்சுகள் பற்றி விளக்கப்பட்டுள்ளது. அவை

•    சிலவகை விஷத்தன்மை கொண்ட பழங்கள் மற்றும் கொட்டைகள்.

•    பூஞ்சைகள் : விஷ/நச்சுக்காளான்கள்

•    அழுகிய உணவுப்பண்டங்கள்

•    சக்திவாய்ந்த வேதிப்பொருட்கள் : வெண்மெழுகு (பாரஃபின்), பெட்ரோலிய வெளுப்பான்கள், களைக்கொல்லிகள், வேதிஉரப்பொருட்கள்

•    மருந்துமாத்திரைகள்: ஆஸ்பிரின், தூக்கமாத்திரைகள், உளத்தமைதியாக்கிகள், இரும்பு சத்து மாத்திரைகள்

•    விலங்குகளைப் பிடிக்கப் பயன்படுத்தும் விஷ மருந்துகள் : எலிப்பாசானம்

•    மது

•    பச்சை நிறம் கொண்ட உருளைக்கிழங்குகள் : (பச்சை உருளைக்கிழங்குகள் எவ்வளவு ஆபத்தானவை என்ற விசயம் பொதுவாக பலருக்கும் தெரிவதில்லை. அவற்றை உண்பதால் அடி வயிற்றில் வலி , வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கும்கூட ஏற்படும். அதன் பின்பு தடுமாற்றமும் நிலைகுலைவும் ஏற்படலாம்.

பொதுவான நச்சுகள்
•    சுவாசத்தை சரிபார்க்கவும். சுவாசம் நின்றுபோயிருந்தால். கிஸ் ஆஃப் லைஃப் (வாய் மீது வாய் வைத்து மூச்சு அளிக்கும் முறை)என்ற முறையை ஆரம்பிக்கவும். ஆனால் விபத்துக்குள்ளானவரின் வாய் மற்றும் உதடுகள் வெந்து / எரிந்து இருந்தால் இம்முறையினைப் பயன்படுத்தாமல் செயற்கை சுவாசம் அளிக்கவும்.

விபத்துக்குள்ளானவர் சுயநினைவுடனோ அல்லது சுயநினைவிழந்தோ இருக்கலாம். அவர் சுயநினைவுடன் இருந்தால் நீங்கள் கொடுக்கும் சிகிச்சைக்கு கொஞ்சம் உதவியாக இருக்கலாம்.

அ. விபத்துக்குள்ளானவர் சுயநினைவுடன் இருக்கும்போது என்ன பொருளை விழுங்கினார், எந்த அளவு விழுங்கினார் மற்றும் எப்போது விழுங்கினார் என்பதையும் கேட்டு அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

ஆ. விபத்துக்குள்ளானவர் அருகில் மாத்திரைகள், காலிபாட்டில்கள் அல்லது மருந்து அட்டைகள்/பெட்டிகள் எவையேனும் இருந்தால், அவற்றை மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும். இவை எந்த வகையான நச்சு விழுங்கப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிய உதவும்.

இ. விபத்துக்குள்ளானவரின் வாய் வெந்தபடியோ,கொப்பளங்களுடனோ அல்லது இதர பாதிப்புகளுடன் இருக்கிறதா என வாயினைப் பரிசோதிக்கவும். அவ்வாறு இருந்து, அதே சமயம் அவரால் விழுங்கமுடியும் என்ற நிலையில் அவரால் குடிக்கமுடிந்த அளவு பால் அல்லது தண்ணீரைக் கொடுங்கள்.

ஈ. விபத்துக்குள்ளானவரை அவசியம் வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். வாந்தி எடுக்கும் பொழுது வாந்தியை சிறு கிண்ணம் அல்லது பாலித்தீன் பையிலோ சேகரித்து அவற்றை மருத்துவமனை பரிசோதனைக்கு அனுப்பி வைக்கவும். இவை எந்த வகையான நச்சு விழுங்கப்பட்டுள்ளது என்பதனைக் கண்டறிய உதவும்.

உ. விபத்துக்குள்ளானவரை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவும். விபத்துக்குள்ளானவர் சுயநினைவை இழந்தோ அல்லது இழந்து கொண்டிருப்பவராக இருக்கும் பொழுது……….

விபத்துக்குள்ளானவர் இன்னும் சுவாசித்துக்கொண்டிருந்தால், கால்களை மேலே உயர்த்திய வண்ணம் அவரை மீளும் நிலையில் வைக்கவும், அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள். (விபத்துக்குள்ளானவர் குழந்தையாக இருந்தால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் போது குழந்தையின் தலைப்பகுதி கீழே இருக்கும் வண்ணம் உங்கள் முட்டிகளின்மேல் வைத்துக்கொள்ளவும் )

•    விபத்துக்குள்ளானவரின் சுவாசத்தைத் தொடர்ந்து கவனியுங்கள். பெரும்பாலான நச்சுகள் விபத்துக்குள்ளானவரின் சுவாசத்தைப் பாதிக்கலாம்.

•    விபத்துக்குள்ளானவரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லமுடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுசெல்லவும்.

•    விபத்துக்குள்ளானவரைக் குளிர்ச்சியாக வைக்கவும். ஈரத் துணியினை நெற்றியில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில் நனைத்த ஸ்பாஞ்சியினை கழுத்து,முதுகுத்தண்டு மற்றும் உடம்பில் வைக்கவும்.

•    விபத்துக்குள்ளானவரால் எவ்வளவு குளிர்ந்த நீர்/பானம் குடிக்கமுடியுமோ அவ்வளவு குளிர்ந்த நீரைக் குடிக்கவைக்கவும்.

•    உடலில் முறுக்கம் மற்றும் வலிப்பு ஏற்படுகிறதா என கண்காணியுங்கள்.

•    விபத்துக்குள்ளானவர் சுயநினைவை இழந்தால், சுவாசத்தை சரிபார்க்கவும் மற்றும் அவரை அந்நிலையிலிருந்து மீளும் நிலையில் வைக்கவும். அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்

•    பூச்சி/விஷ மருந்து பாட்டிலைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். ஏனெனில் பாட்டில்களில் சிகிச்சை குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.அது மருத்துவரின் சிகிச்சைக்கும் உதவும்.


தோல்/சருமத்தின் மூலம் நச்சு புகுதல்:
தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளில் பெரும்பான்மையானவற்றில், (குறிப்பாக தோட்ட ஆட்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்துபவை) வீரியம் மிக்க வேதிப்பொருட்கள் (உதரணம்:மாலதியான்) நிறைய இருக்கின்றன.அவற்றைப் பயன்படுத்தும்போது சருமத்தின் வழியே உடலுக்குள் நுழைந்து அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன.

அறிகுறிகள்:
நடுக்கம், உடல் முறுக்கம் மற்றும் வலிப்பு ஏற்படுதல்

•    விபத்துக்குள்ளானவர் படிப்படியாக சுயநினைவை இழத்தல்

பராமரிப்பு
நச்சுப்பொருட்களால் பாதிக்கப்பட்ட சருமப் பகுதியை குளிர்ந்த நீரைக்கொண்டு நன்கு கழுவவும்.

•    நச்சு/வேதிப்பொருளால் பாதிக்கப்பட்ட உங்கள் உடையினைக் கழற்றும் பொழுது, உடம்பில் அவை படாதவாறு கவனமாகக் கழற்றவும்
விபத்துக்குள்ளானதை மீண்டும் ஒருமுறை உறுதிசெய்யுங்கள். அவரை கீழே படுக்கவையுங்கள் மற்றும் அசைவின்றி அமைதியாக இருக்கும்படி அறிவுறுத்துங்கள்.

•    விபத்துக்குள்ளானவரை எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லமுடியுமோ அவ்வளவு விரைவாகக் கொண்டுசெல்லவும்.

•    விபத்துக்குள்ளானவரைக் குளிர்ச்சியாக வைக்கவும். ஈரத் துணியினை நெற்றியில் வைக்கவும் மற்றும் குளிர்ந்த நீரில் நனைத்த ஸ்பாஞ்சியினை கழுத்து,முதுகுத்தண்டு மற்றும் உடம்பில் வைக்கவும்.

•    விபத்துக்குள்ளானவரால் எவ்வளவு குளிர்ந்த நீர்/பானம் குடிக்கமுடியுமோ அவ்வளவு குளிர்ந்த நீரைக் குடிக்கவைக்கவும்.

•    உடலில் முறுக்கம் மற்றும் வலிப்பு ஏற்படுகிறதா என கண்காணியுங்கள்.

•    விபத்துக்குள்ளானவர் சுயநினைவை இழந்தால், சுவாசத்தை சரிபார்க்கவும் மற்றும் அவரை அந்நிலையிலிருந்து மீளும் நிலையில் வைக்கவும். அதாவது அவரை மூச்சு விடுவதற்கு ஏதுவாக ஒருபக்கமாக சாய்த்து படுக்கவையுங்கள். எனினும் கால்களை சற்று உயரத்தில் இருக்குமாறு செய்யுங்கள்

•    பூச்சி/விஷ மருந்து பாட்டிலைப் பத்திரமாக வைத்துக் கொள்ளவும். ஏனெனில் பாட்டில்களில் சிகிச்சை குறிப்புகள் கொடுக்கப்பட்டு இருக்கும்.அது மருத்துவரின் சிகிச்சைக்கும் உதவும்.
தனிப்பட்ட சுகாதாரம்

நாம் உட்கொள்ளும் உணவு, நாம் நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் முறை, உடற்பயிற்சி, பாதுகாப்பான உடலுறவு போன்ற அனைத்தும் நம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. பெரும்பாலான நோய்கள் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளாததினால்  ஏற்படுகிறது. ஒட்டுண்ணிகள் (பாராசைட்ஸ்), புழுக்கள் (வார்ம்ஸ்), சொரி சிரங்கு (ஸ்காபிஸ்), புண்கள் (சோர்ஸ்), பற்சிதைவு (டூத் டிகே), வயிற்றுப்போக்கு (டையேரியா) மற்றும் இரத்தபேதி (டிசென்டரி) போன்றவை தனிப்பட்ட நபரின் உடல் சுகாதாரம் சரியில்லாததினால் ஏற்படுகிறது. இவ்வகை நோய்கள் அனைத்தையும் உடலை சுத்தமாக, சுகாதாரமாக வைத்துக்கொள்ள பழகுவதின் மூலம் ஏற்படாமல் தடுக்கலாம்.


தலையை (சிரசு) சுத்தம் செய்தல்
வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை ஷாம்பு அல்லது சீக்காய் உபயோகப்படுத்தி தலைக்கு குளிக்கலாம்.

கண், காது மற்றும் மூக்கை சுத்தம் செய்தல்
சுத்தமான தண்ணீரை கொண்டு தினமும் கண்களை (கழுவவேண்டும்) சுத்தம் செய்ய வேண்டும்.

•    காதுகளில் குறும்பி (வாக்ஸ்) எனப்படும் பொருள் உருவாகி காற்று செல்லும் வழியினை அடைக்கிறது. இது வலியை ஏற்படுத்தும். எனவே காதுகளை பஞ்சு கொண்டு வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

•    மூக்கில் காணப்படும் சளி போன்ற திரவம் காய்வதினால் ஏற்படும் பொருள் மூக்கு துவாரத்தை அடைத்துக் கொள்ளும். எனேவ தேவைப்படும் போதெல்லாம் மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும். சிறுபிள்ளைகளுக்கு சளி மற்றும் ஜலதோஷம் ஏற்படும் போது மென்மையான துணியினைப் பயன்படுத்தி மூக்கினை சுத்தம் செய்ய வேண்டும்.

வாயினை சுத்தம் செய்தல்
மென்மையான பல்பொடி மற்றும் பேஸ்ட் போன்றவை பற்களை சுத்தம் செய்வதற்கு உகந்தவைகள். தினமும் காலை எழுந்த உடன் மற்றும் இரவு உறங்கச் செல்லும் முன் என இரண்டு வேலை பற்களை சுத்தம் செய்யவும். கரித்தூள், உப்பு, கரட்டுத்தன்மை கொண்ட பற்பொடி இதுபோன்ற பிற பொருட்களை கொண்டு பற்களை சுத்தம் செய்யும்போது பற்களின் வெளிப்படலத்தில் கீறல்கள் ஏற்படுத்தும்.

•    எந்தவொரு உணவுபொருளையும் உட்கொண்ட பின்னர் சுத்தமான தண்ணீரைக் கொண்டு வாயினை கழுவவேண்டும். இவ்வாறு செய்வது, உணவுப் பொருள் பற்களின் இடையில் படிந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துவது, பல்ஈறுகளை கெடுப்பது மற்றும் பல்சொத்தை (அ) பற்சிதைவு ஏற்படுவது போன்றவற்றை தடுக்கிறது.

•    சத்தான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இனிப்புப் பொருட்கள், சாக்லேட், ஐஸ்கிரீம் மற்றும் கேக் போன்ற உணவுகளை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும்.

•    பற்சிதைவிற்கான அறிகுறிகள் காணும்போது பல்மருத்துவரை உடனடியாக சந்தித்து ஆலோசிக்க வேண்டும்.

•    முறையாக மற்றும் சரியாக பல் துலக்கும் முறைகள் பற்களில் கறை படிவதை தடுக்க உதவுகிறது. பற்களை சுத்தம் செய்ய பல்மருத்துவரை அணுகவும்

தோல் பராமரிப்பு
தோல் உடலை முழுவதும் மூடியுள்ளது. இது உடல் உறுப்புகளை பாதுகாக்கிறது மற்றும் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

•    தோல் உடலில் உள்ள கழிவுப் பொருட்களை வியர்வையாக வெளியேற்ற உதவுகிறது. தோலில் குறைபாடு இருப்பின் வியர்வை சுரப்பிகள் அடைபடுகிறது. இதன் விளைவாக புண்கள் (சோர்ஸ்) மற்றும் பருக்கள் (அக்கி) போன்றவைகள் ஏற்படுகின்றன.

•    தோலை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் சுத்தமான தண்ணீர் மற்றும் சோப்பினை கொண்டு குளிக்க வேண்டும்.

கைகளைக் கழுவுதல்
உணவு உட்கொள்வது, மலம் கழித்தபின் மலவாயினை சுத்தம் செய்வது, மூக்கினை சுத்தம் செய்வது, மாட்டுச்சாணம் அள்ளுவது போன்ற எல்லா செயல்களையும் நாம் கைகளைக் கொண்டு செய்கிறோம். இதுபோன்று செய்யும் போது, பல நோய்களை ஏற்படுத்தும் கிருமிகள் நகங்களின் கீழ் மற்றும் தோலின் மேற்பரப்பில் தங்கியிருக்கும். இதுபோன்ற செயல்களுக்குப் பின், மிகமுக்கியமாக சமைப்பதற்கு முன், கைகளை (கை மணிக்கட்டிற்கு மேல், விரல் இடுக்குகள் மற்றும் நகச்சந்துகள்) சோப்பு கொண்டு கழுவுவது, பல நோய்கள் ஏற்படுவதை தடுத்து நிறுத்த உதவுகிறது.

•    நகங்களை முறையாக வெட்ட வேண்டும். நகங்களை கடிப்பது மற்றும் மூக்கை நோண்டுதல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

•    பிள்ளைகள் மண்ணில் விளையாடுவர் எனவே உணவிற்கு முன் கைகளைக் கழுவ கற்பிக்க வேண்டும்.

•    இரத்தம், மலம், சிறுநீர் மற்றும் வாந்தி போன்றவற்றை தொடுவதை தவிர்க்கவும்.

மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் போது சுத்தம் செய்தல்

மலம் மற்றும் சிறுநீர் கழித்தபின் உறுப்புகளை சுத்தமான நீரைக் கொண்டு முன்னிருந்து பின்னாக சுத்தம் செய்தல் வேண்டும். கைகளை சோப்பினை கொண்டு கழுவ மறந்து விடக்கூடாது. கழிவறை, குளியலறை மற்றும் சுற்றுப்புறத்தை துப்புரவாக வைத்துக் கொள்ளவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்கவும்.

இனப்பெருக்க உறுப்புகளின் தூய்மை
ஆண்கள்  மற்றும் பெண்கள் என இருபாலரும் தங்கள் இனப்பெருக்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

•    பெண்கள் மாதவிடாய் நேரங்களில் அவசியம் தூய்மையான, மென்மையான துணியினைப் பயன்படுத்த வேண்டும். துணியினை (நாப்கின்ஸ்) ஒரு நாளில் குறைந்தது இரண்டு முறை மாற்ற வேண்டும்.

•    வெள்ளைப் போக்குடன் (வெள்ளைப்படுதல்) துர்நாற்றம் காணப்படும் பெண்கள் அவசியம் மருத்துவரை அணுகவும்.

•    இனப்பெருக்க தடத்தில் (உறுப்புகளில்) நோய்தொற்றினை காணும்போது உடனடியாக மருத்துவரை அணுகவும்.

•    பாதுகாப்பான உடலுறவுக்கு ஆணுறைகளை (காண்டம்ஸ்) பயன்படுத்தவும்.

•    இனப்பெருக்க உறுப்புகளை உடலுறவுக்கு முன்பும் பின்பும் கழுவவும் (சுத்தம் செய்யவும்)

உணவு மற்றும் சமையலின் போது சுகாதாரம்

சமையல் செய்யும் போது சுகாதாரமான முறையில் சமைப்பதினால் உணவு மாசுபடுதல், உணவு நச்சுப்படுதல், மற்றும் நோய் பரவுதல் போன்றவற்றை தடுத்து நிறுத்தலாம்.

•    சமைக்கும் பகுதி மற்றும் சமையல் சாமான்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

•    அழுகின மற்றும் கெட்டுப் போன உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.

•    சமைப்பதற்கு முன்பு மற்றும் பரிமாறும் முன்பு கைகளைக் கழுவ வேண்டும்.

•    காய்கரி போன்ற உணவுப் பொருட்களை சமைப்பதற்கு முன் நன்கு கழுவவேண்டும்.

•    உணவுப் பொருட்களை சரியான முறையில் சேமித்து வைக்க வேண்டும்.

•    உணவுப் பொருட்களை வாங்கும்முன் எந்த நாள்வரை அந்த பொருளினைப் பயன்படுத்தலாம் என்ற விவரத்தை பார்த்து வாங்கவும் (பெஸ்ட் பிபோர் என்று அட்டையில் குறிப்பிடப்படும் தேதி).

•    சமையலறைக் கழிவுகளை சரியான முறையில் அப்புறப்படுத்தவும்.

மருத்துவ சுகாதாரம் (அ) நலன்
காயம் ஏற்பட்டால், சரியான சுத்தமான பேன்டேஜ் /துணியினை உபயோகித்துப் பராமரிக்க வேண்டும்.

•    மருந்துகளை வாங்கும் போது அம்மருந்து செயல் இழக்கும் தேதி என்ன என்பதனை பார்த்து வாங்க வேண்டும்.

•    தேவையற்ற மருந்துகளை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும்.

•    மருத்துவரின் பரிந்துரையின்றி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.
இரத்ததானம்
ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் யாராவது சிலருக்கு இரத்தம் தேவைப்படுகிறது. சிலசமயம் உங்கள் இரத்தம் ஒரு உயிரை விட மேலனதாக ஆகிவிடும். விபத்துக்குள்ளானவர்கள், குறைப்பிரசத்தில் பிறந்த குழந்தைகள், பெரிய அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகள் போன்றவர்களுக்கு முழு இரத்தம் தேவைப்படுகிறது.

அங்கே உங்கள் இரத்தம் பரிசோதனைக்குப் பிறகு நேரடியாக பயன்படுத்தப்படுகிறது. அடிபட்ட, இரத்தசோகையினால் பாதிக்கப்பட்ட மற்றும் மற்ற அறுவைசிகிச்சைக்குள்ளாகும் நோயாளிகளுக்கு இரத்த சிவப்பணுக்கள் மட்டும் தேவைப்படுகிறது. அத்தகைய இரத்தச்சிவப்பணுக்கள் தானம் கொடுத்த உங்கள் இரத்தத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுகின்றன.

இரத்ததானம் செய்யும் போது கவனிக்கவேண்டிய சில குறிப்புகள்

இரத்ததானம் கொடுப்பதற்கு குறைந்தது 3 மணி நேரத்திற்கு முன்னர் நன்றாக சாப்பிடுதல் வேண்டும்.

இரத்ததானம் அளித்தப்பின் வழங்கப்படும் சிற்றுணவுகளை சாப்பிடுதல் மிகவும் முக்கியமானது. அதன் பிறகு நன்றாக உணவருந்துதல் வேண்டும்.
இரத்ததானமளிக்கும் நாளில் புகைப்பிடித்தலை தவிர்க்கவும். தானமளித்த 3 மணி நேரத்திற்குபிறகு புகைப்பிடிக்கலாம்.
இரத்ததானம் அளிப்பதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு நீங்கள் மது அருந்தியிருந்தால் இரத்ததானம் செய்வதற்கு அனுமத்திக்கப்பட மாட்டீர்கள்

இரத்ததானம் பற்றிய தவறான நம்பிக்கைகள்
“நான் இரத்ததானம் அளித்தப்பின் சோர்வாகவும், அசதியாகவும் உணர்கிறேன்” – இரத்ததானம் செய்தபின்பு நீங்கள் நீராகாரங்கள் அருந்துவதாலும் மற்றும் நன்றாக உணவருந்துதலும் நீங்கள் சோர்வாகவும், அசதியாகவும் உணரமாட்டீரகள்.

“நான் சாதாரண வேலைகளை தொடரமுடியாது ” – இரத்ததானம் அளித்த பிறகு வேலைகளை செய்யவேண்டாம் என்று கூறினாலும் உங்களால் எல்லா வேலைகளையும் தொடரமுடியும்.
“எனக்கு இரத்தம் குறைவாக இருக்கும்” – நீங்கள் மருத்துவரால் தானமளிக்கத் தகுதியானவராக சான்றளிக்கப்பட்டால் தானமளித்தப்பின்பும் உங்கள் உடலில் போதுமான இரத்தம் இருக்கும்.
“நான் மது அருந்த முடியாது” - நீங்கள் இரத்ததானமளித்த மறுநாள் மது அருந்தலாம்

இரத்தம் பற்றிய உண்மைகள்
இரத்தம் என்பது உயிரை பாதுகாக்கும் திரவம். இது உடலிலுள்ள இதயம், தமனிகள், சிரைகள் மற்றும் தந்துகிகள் மூலமாக உடலில் சுழற்சி செய்கிறது.

இரத்தம் நமது உடம்பிற்கு உணவு, தாதுஉப்புகள், ஹார்மோன்கள், உயிர்சத்துகள் எனப்படும் வைட்டமின்கள், எதிர்உயிரி மருந்துகள், வெப்பம் மற்றும் ஆக்ஸிஜன் போன்றவற்றை எடுத்துச்செல்கிறது.
இரத்தம் உடலிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுப்பொருட்கள் மற்றும் கரிமில வாயுவை எடுத்துச்செல்கிறது.
இரத்தம் நோய்தொற்றுக்கு எதிராக போராடுவதோடு மட்டுமல்லாமல், காயங்களை ஆறவைக்கவும் உதவுகிறது. உங்களுடைய உடலை ஆரோக்யமாக வைத்திருக்கிறது.
உங்களுடைய உடல் எடையில் 7 சதவிகிதம் இரத்தமாக இருக்கிறது. புதிதாக பிறந்த குழந்தையின் உடலில் ஒரு கிண்ணம் அளவுள்ள இரத்தம் இருக்கும்
இரத்த வெள்ளையணுக்கள் கிருமிகளின் தொற்றினை எதிர்க்கும் முதன்மை நோய் எதிரியாகும்.
கிரோனுலோஸைட்ஸ் என்ற ஒருவகை இரத்த வெள்ளையணுக்கள், இரத்த நாள சுவர் மீது உருண்டு பாக்டீரியாக்களை தேடி அழிக்கிறது.
இரத்த சிவப்பணுக்கள் உடலிலுள்ள உறுப்புகளுக்கும், திசுக்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச்செல்கிறது.
இரண்டு மூன்று சொட்டு இரத்ததில் காணப்படும் சுமார் ஒரு பில்லியன் இரத்த சிவப்பணுக்கள் இருக்கும்
இரத்த சிவப்பணுக்கள் சுமார் 120 நாட்கள் இரத்த ஒட்ட மண்டலத்தில் உயிருடன் இருக்கும்
இரத்த தகடுகள் இரத்த உறைதலுக்கு உதவிப்புரிந்து லுகீமீயா மற்றும் இதர புற்றுநோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு வாழ்வதற்கு ஒரு வாய்ப்பினை வழங்குகிறது .

இரத்த தானம் ஏன் செய்யவேண்டும்?
இரத்தம் ஒரு உயிரோட்ட திரவம், எல்லா உயிர்களும் இதனைச் சார்ந்த்தே. இரத்தமானது 60% திரவ பொருளாலும் 40% திட பொருளாலும் ஆனது. திரவபொருள் பிளாஸ்மா என்றழைக்கப்படுகிறது.

இது 90% நீராலும் 10% உணவுப்பொருள், ஹார்மோன்கள் மற்றும் இதர பொருட்களாலும் ஆனது. இரத்தம் எளிதில் உணவு மற்றும் மருந்துகளால் நிரப்பிக்கொள்ளும். ஆனால் இரத்தத்தின் திடப்பகுதிகளான இரத்த சிவப்பணுக்கள், இரத்த வெள்ளையணுக்கள் மற்றும் இரத்த தகடுகள் போன்றவைகள் இறந்தால் மீண்டும் உருவாக்க நீண்ட நாட்கள் எடுத்துக்கொள்ளும்
இப்படியாக உள்ள நீங்கள், ஒரு நோயாளிக்கு இரத்தமாற்றம் செய்ய எடுத்துக்கொள்ளப்பட்ட நேரம், அவர்களின் உயிரைவிட விலைமதிப்பு மிக்கதாகிறது.

சில சமயங்களில் நம்முடைய உடல் இரத்த பரிமாற்றத்திற்கு ஏற்றதாக இல்லாமல்கூட இருக்கலாம்.

நீங்கள் அறிந்தது போலவே இரத்ததை அறுவடை செய்யமுடியாது, தானத்தால் மட்டுமே வழங்க முடியும். ஆகவே, இரத்தம் தேவைப்படும் நபருக்கு இரத்ததானம் அளிப்பதன் மூலம் ஒரு உயிரை காப்பாற்ற முடியும்.

No comments:

Post a Comment